சித்திரைச் சாவடி தடுப்பணை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி!
கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் இரு கரைகளைத் தொட்டவாறு நீர் செல்கிறது. மேலும் சித்திரைச்சாவடி தடுப்பணையில் நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வடவள்ளி பி.என்.ஆர் நகர்ப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 9 பேர் சித்திரைச் சாவடி தடுப்பணையில் குளிக்க வந்தனர். அப்போது நீர் வேகமாகச் சென்றதால் 9 பேரும் கைகளைப் பிடித்துக் கொண்டு நீரில் இறங்க முயன்றனர். அதில் 3 மாணவர்கள் திடீரென நீரில் மூழ்கியதால் சக மாணவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். இருவரை மீட்ட நிலையில் வடவள்ளியை சேர்ந்த தனியார்ப் பள்ளியில் பயின்று வந்த பிரத்தீவ்ராஜ் (17) என்ற சிறுவன் மட்டும் ஆழமான பகுதியில் மூழ்கினார். இதையடுத்து அவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான மீட்பு குழுவினர் நீரில் இறங்கி மாணவரை தேடி மீட்டனர். அவரை கரைக்கு கொண்டு வந்து சி.பி.ஆர் சிகிச்சையளித்து காப்பாற்ற முயன்றனர். அவரை கரைக்குக் கொண்டு வந்து சி.பி.ஆர் சிகிச்சையளித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பிரத்தீவ்ராஜ் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.