நேஷனல் லீக் கால்பந்து – 2 -வது முறையாக போர்ச்சுகல் சாம்பியன்…!
“நேஷனல் லீக்” கால்பந்து விளையாட்டு போட்டியில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி 2 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
“நேஷனல் லீக்” கால்பந்து விளையாட்டு தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டிகள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. அதில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் மோதினர்.
பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஆரம்பத்தில் இருந்தே கோல்கள் அடிக்கும் முனைப்புடன் விளையாடினர்.ஆட்டத்தின் 21 -வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை அடித்து போர்ச்சுகலுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இதையடுத்து அடுத்த 5 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் நுனோ மொன்டஸ் தனது முதல் சர்வதேச கோலை அடித்து, ஆட்டத்தை சமன் செய்தார். இதனிடையே ஆட்டத்தின் முதல் பாதி நேரம் முடிவடையும் நேரத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கெல் ஒயார்சாபெல் அணியின் இரண்டாவது கோலை அடித்தார்.
இரண்டாவது பாதியில் தொடர்ந்து போராடிய நிலையில் போர்ச்சுகல் அணியும் தனது இரண்டாவது கோலை அடித்தது. பின்னர் போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் ரொனால்டோ காயம் காரணமாக வெளியேற கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல்களை அடிக்க போராடியது.
இறுதியில் 2 – 2 என்ற சமன் ஆனதால், பெனால்டி சூட் அவுட் முறையில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. அதன் படி பெனால்டி சூட் அவுட்டில் 5 – 3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.