பணியைப் புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வை வலியுறுத்தி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அரசாணை 62 யை நிறைவேற்ற வேண்டும், தற்போது தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.473 யை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது போல ரூ.770 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி ஆணையர் அழைத்துப் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய சமூக நீதிக் கட்சித் தலைவர் பன்னீர்செல்வம்: கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ,770 வழங்கப்படாமல் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி விபரங்களை ஊழியர்களுக்குக் கொடுக்க மறுக்கின்றனர்.
அரசாணை 62 படி ஊதியம் வழங்க வேண்டும். திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வழங்குவது போல ஊதியம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை இதனால் மீண்டும் போராட்டத்தைத் துவங்கியுள்ளோம்.
மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.