வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு!
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (04.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் (04.06.2025) உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தெற்கு மண்டலம், வார்டு எண். 100க்குட்பட்ட பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி. முத்துநகர் பகுதியில் சாலை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலை சீரமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம் போத்தனூர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில், பாலக்காடு, ரயில்வே பாதைக்கு மேலேயும் பொள்ளாச்சி ரயில்வே பாதைக்கு கீழ்ப்பகுதியிலும் பாலம் அமைத்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான குறிச்சி குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. பணியினை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தெற்கு மண்டலம், வார்டு எண். 100க்குட்பட்ட போத்தனூர் மேட்டூர் சாலை, மேட்டூர் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளையும், வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் சீரமைக்கப்பட்ட குளத்தில் (Lagoon) நீர்த்தேக்கப்பட்டுள்ளதையும் மற்றும் வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.