மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை.
கோயம்புத்தூர்: மாடு மேய்க்கச் சென்ற மூதாட்டிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு.
கோயம்புத்தூர் கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 60 வயது பட்டியலின மூதாட்டி, ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மாடு மேய்க்கச் சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி (40) என்பவர், மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது தொடர்பாகப் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, வேலுச்சாமியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோயம்புத்தூர் எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றப்பத்திரை தாக்கல் செய்து விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் வேலுச்சாமி குற்றவாளி என நீதிபதி விவேகானந்தர் தீர்ப்பளித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட வேலுச்சாமிக்கு இந்தியத் தண்டனைப் பிரிவு 325 க்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ஐயாயிரம் ரூபாய் அபராதம் மற்றும் கட்ட தவறினால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், எஸ்.சி எஸ்.டி சட்டப் பிரிவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் 3,000 ரூபாய் அபராதம்.
506 (1) சட்டப் பிரிவுக்கு 2 ஆண்டு கடுங்காவல், 376க்கு ஆயுள் தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கின்றது.
முதலில் 7 ஆண்டுகள், 7 ஆண்டுகள் என ஒரு ஆயுள் கணக்கிலும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை என மொத்தம் 16 ஆண்டுகள் சிறை கடுங்காவல் தண்டனையை வேலுச்சாமி அனுபவித்த பின், ஆயுள் சிறை 14 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.