தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின விழாவில் பெண்களின் வீர தீரச் செயல்களைக் கவுரவிக்கும் வகையில் ”கல்பனா சாவ்லா” விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீர தீரச் செயல் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :
துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தினவிழாவின் போது வழங்கப்படுகிறது. துணிச்சல் மற்றும் வீரசாகச செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
உரிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 16.06.2025-க்குள் கருத்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.