தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சூறைக்காற்றில் சாய்ந்த புங்கை மரம்.
கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்த புங்கை மரம் வேரோடு சாய்ந்தது.
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, நரசீபுரம், பேரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் திடீரென தொண்டாமுத்தூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்த புங்கை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

அப்போது அருகே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த நிலைய அலுவலர் அனில்குமார், சிறப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள், மரத்தின் கிளைகளை இயந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர்.