கனமழை எதிரொலி: பேரூர் படித்துறைக்குத் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்கள் எச்சரிக்கை
கோயம்புத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது, இதனால் பேரூர் படித்துறைக்குத் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சிறுவாணி அடிவாரத்தில் மட்டும் சுமார் 12 செ.மீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று அமாவாசை என்பதால் பேரூர் படித்துறைக்கு ஏராளமான பொதுமக்கள் காலை முதல் தங்கள் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வருகின்றனர்.
அவர்கள் பேரூர் நொய்யல் ஆற்றில் இறங்க வேண்டாம் எனப் பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கரையிலிருந்தவாறு பொதுமக்கள் வழிபாடு செய்துவிட்டுக் கிளம்பிச் செல்கின்றனர்.