மூதாட்டி வீட்டைச் சேதப்படுத்தி சென்ற காட்டு யானை – வனத்துறை சார்பில் இழப்பீடு
கோயம்புத்தூர் நல்லூர் வயல் பகுதியில் காட்டு யானை வீட்டைச் சேதப்படுத்திச் சென்ற நிலையில், வீட்டின் உரிமையாளரான மூதாட்டிக்கு வனத்துறை சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் நல்லூர் வயல் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சம்மாள் (75), இவர் நேற்று வீட்டில் தனது நிறைமாத கர்ப்பிணி மகளுடன் இருந்தபோது, திடீரென சாடிவயல் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை திடீரென மூதாட்டியின் வீட்டின் அருகே சிமெண்ட் சீட்டுகளால் போடப்பட்ட அறையை உடைக்க துவங்கியது.
சத்தம் கேட்டதால் மூதாட்டி பார்த்தபோது காட்டு யானை ஒன்று வீட்டை உடைக்க முயல்வது தெரியவந்தது. இதையடுத்து மூதாட்டி வெளியே ஓடிய நிலையில், உடன் இருந்த கர்ப்பிணிப் பெண்ணை அருகே இருந்த மற்றொரு வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். சிமெண்ட் சீட்டுகளால் போடப்பட்ட அறையைக் காட்டு யானை முற்றிலுமாக சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றது.
இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானை அடர் வரப் பகுதிக்குள் விரட்டினர். மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு வனத்துறை சார்பில் ரூ.5,000 மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் சார்பில் ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.15,000 மூதாட்டிக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை நல்லூர் வயல் குடியிருப்பு பகுதிக்குள் வராத காட்டு யானை முதல் முறையாக வந்ததாகவும் ஆட்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.