முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குக் கொலை மிரட்டல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குக் கடிதம் மூலம் கொலை மிரட்டல் – காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் சுகுணாபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு முகவரி குறிப்பிடாத கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் ஜூன் 30ஆம் தேதி கோயம்புத்தூரில் வெடிகுண்டு சம்பவம் நடத்தப்பட உள்ளதாகவும், அதில் எஸ்.பி வேலுமணியைக் கொலை செய்ய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் கொலை செய்யாமல் இருக்க தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தில் ஒரு கோடியை காளப்பட்டி சாலையில் உள்ள குப்பைத்தொட்டி அருகே வைக்க வேண்டும் என்றும், அதற்கான லொக்கேஷன் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எழுதப்பட்டிருந்தது.
அதே போல் இதுகுறித்து காவல்துறையிடம் தெரிவித்தால் குடும்ப உறுப்பினர்களையும் மூன்று மாதத்திற்குள் கொலை செய்து விடுவோம் என மிரட்டலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வழக்கறிஞர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மிரட்டல் கடிதம் விடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மிரட்டல் கடிதம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்