மதுக்கரை ரயில்வே சுரங்கப்பாதை விரிவாக்கம் – போக்குவரத்து மாற்றம்
கோயம்புத்தூர் – பாலக்காடு நெடுஞ்சாலை, மதுக்கரை மரப்பாலத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை ஒரு வழிப்பாதையாக இருந்தது. இதனால் ஒரு நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும், மேலும் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதன் காரணமாகச் சுரங்கப்பாதையை அகலப்படுத்தி சாலையை விரிவாக்கம் செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டுத்தது. இதையடுத்து மதுக்கரை மரப்பாலம் சுரங்கப்பாதை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. இதனால் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் படி கோயம்புத்தூரிலிருந்து மரப்பாலம் வழியாகப் பாலக்காடு செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் இலரக மோட்டார் வாகனங்கள் மதுக்கரை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, குவாரி அலுவலக சாலை, குரும்பபாளையம் சாலை மற்றும் மதுக்கரை சந்தை சாலை வழியாகச் சென்று செட்டிபாளையம் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டும்.
பாலக்காட்டில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் செட்டிபாளையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, வீரகுக்கடை பாலம் மற்றும் ஏ.சி.சி. சிமென்ட் தொழிற்சாலை சாலை வழியாக எதிர்த் திசையில் செல்ல வேண்டும்.
நகரத்திலிருந்து பாலக்காடு செல்லும் லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் சந்திப்பு, குறிச்சி மற்றும் ஈச்சனாரி சாலை வழியாகச் சேலம் – கொச்சி நெடுஞ்சாலையை அடைய வேண்டும். பாலக்காடு – கோயம்புத்தூர் திசையில் செல்லும்போது இந்த வாகனங்கள் அதே பாதையில் செல்ல வேண்டும்.
ஆத்துப்பாலம் மற்றும் சுந்தராபுரம் சந்திப்புகளிலிருந்து பாலக்காடு சாலை நோக்கிச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் குறிச்சி – கண்ணமநாயக்கனூர் சாலை வழியாகச் சென்று, இடதுபுறம் திரும்பி சேலம் – கொச்சி நெடுஞ்சாலையில் நுழைய வேண்டும். பாலக்காடு சாலையிலிருந்து நகரத்தை அடைய, இந்தப் பேருந்துகள் அதே பாதையில் செல்ல வேண்டும்.
கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் SETC, TNSTC மற்றும் KSRTC பேருந்துகள் குறிச்சி – கண்ணமநாயக்கனூர் சாலை, மதுக்கரை மார்க்கெட் சாலை மற்றும் செட்டிபாளையம் சந்திப்பு வழியாகச் சேலம் – கொச்சி நெடுஞ்சாலையை அடைய வேண்டும். பாலக்காட்டில் இருந்து கோயம்புத்தூருக்குச் செல்லும் பேருந்துகள் அதே வழித்தடத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.