உயிரிழந்த பெண் யானை – வயிற்றில் ஆண் குட்டி இருந்த பரிதாபம்
கோயம்புத்தூர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த பெண் யானை வயிற்றில் 15 மாத ஆண் குட்டியிருந்தது இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.
கோயம்புத்தூர் மருதமலை வனப்பகுதி, பாரதியார் பல்கலைக்கழகம் பின்புறத்தில் உடல்நலக் குறைவால் படுத்திருந்த பெண் காட்டு யானை கண்டறியப்பட்டது. அந்த காட்டு யானைக்குக் கடந்த நான்கு நாட்களாக கால்நடை மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று பெண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
திடீர் மாரடைப்பால் காட்டு யானை உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மருதமலை வன எல்லையில் உயிரிழந்த பெண் காட்டு யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியது. மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பெண் யானையின் வயிற்றிலிருந்த சுமார் 15 மாத ஆண் குட்டி இறந்த நிலையில் கண்டறியப்பட்டது. அதனை மருத்துவர்கள் வெளியே எடுத்த நிலையில், யானையின் குடலை ஆய்வு செய்தபோது பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து கல்லீரல், சிறுநீரகம், இருதயம் ஆகியவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இறந்த பெண் யானையின் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததும், இருதயத்தில் அழுத்தம் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து உயிரிழந்த பெண் யானையின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், வனப்பகுதியில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.