தடாகம் அருகே அழுகிய நிலையில் ஆண்சடலம் மீட்பு!
கோயம்புத்தூர் தடாகம் அருகே அழுகிய நிலையில் ஆண்சடலம் – வன விலங்குகள் தாக்கியதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னத்தடாகம் இந்திரா நகர்ப் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் அப்பகுதி மக்கள் பாலத்திற்கு அடியில் சென்று பார்க்கும் போது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது.
உடனடியாக பொதுமக்கள் தடாகம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் அங்குச் சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலில் விலங்குகள் தாக்கியதற்காகத் தடயங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அந்த கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. முகம் முழுவதும் அழுகி மண்டை ஓடு மட்டும் தெரிவதால் யார் அந்த நபர் எனக் கண்டறிவது சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றியும், கோயம்புத்தூரில் பல்வேறு காவல் நிலையங்களில் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ள புகார்களைக் கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னத்தடாகம் மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள், உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.