அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

தமிழ் கடவுள் முருகனுக்கு புகழ் சேர்ப்பது தற்போதை ஆட்சி தான் – அமைச்சர் சேகர்பாபு

உலகிலேயே தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமையும், புகழுக்கு புகழ் சேர்த்த ஆட்சி முதல்வர் தலைமையிலான தற்போதைய ஆட்சி தான் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள அன்னகூடம், பசுமட காப்பகம் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து ஆய்வு செய்தார். தொடர்ந்து மருதமலை கோவிலில் அமைய உள்ள 184 அடி சிலை பணிகள், மின் தூக்கி மற்றும் பாலிடெக்னிக் அமைய உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் துறை ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு கூறும் போது :
கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குடமுழக்கு விழா கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது கோவில் அருகே கட்டப்பட்ட தர்ப்பண மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

தன்னார்வ அமைப்பு, இந்து சமய அறநிலைத்துறை, பொதுப்பணித்துறை என ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த தர்ப்பணம் மண்டபத்தில் ஒரே நேரத்தில் 50 பேர் தர்ப்பணம் செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அதன் அருகே புதிய அன்னதான கூடம், பசுமடம் காப்பகம், மற்றும் கழிப்பிடங்கள் திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டது. அதனை இன்று திறந்து வைத்துள்ளோம். அதே போல் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். வெகு விமர்சையாக நடைபெற்றது.

கிராமத்தில் உள்ள சிறிய கோவிலுக்கு சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இது ஒரு ஆன்மீக ஆட்சி என்பதற்கு சாட்சியாக உள்ளது. கடந்த 1993 முதல் 2024 வரை 34 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேர் மக்கள் வெள்ளோட்டத்தில் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு 2,948 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆட்சியில் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு பக்தர்களாலும் உபயதாரர்களால் வழங்கப்பட்ட ரூ.1,336 கோடி முறையாக திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் மருதமலை கோவிலில் ஆசியாவிலேயே உயரமான 184 அடி உயர முருகன் சிலை அமைக்க தமிழக முதல்வர் அனுமதி வழங்கி உள்ளார். அந்த பணிகளை இன்று துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டோம்.

அதேபோல் ஈரோடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் முருகன் சிலை அமைக்க உள்ளோம். அதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் பணிகள் துவங்க உள்ளது.

இந்து அறநிலைத்துறை சார்பில் இரண்டு பாலிடெக்னிக் கல்லூரிகள் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் மருதமலை கோயிலில் பாலிடெக்னிக் கல்லூரி அமைய உள்ள பகுதியை ஆய்வு செய்தோம். சமயபுரம் கோயிலில் நர்சிங் கல்லூரி கொண்டு வர உள்ளோம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்திலும் நர்சிங் கல்லூரி வர உள்ளது.

மருதமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஜூலை இறுதிக்குள் இப்பணிகள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பாறைகள் நடுவே வருவதால் தாமதமானது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மின் தூக்கி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மருதமலையில் 184 ft உயர முருகன் சிலை அமைக்கும் பணிக்காக பெருந்திட்ட வரைவு போடப்பட்டுள்ளது. அதில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது. பணிகள் நிறைவடைந்த பிறகு இது முருக பக்தர்களால் வரவேற்கக்கூடிய வகையில் அமையும்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதி, இருப்பிட வசதி அனைத்தும் மேம்படுத்தப்படும். உலகிலேயே தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்து புகழுக்கு புகழ் சேர்த்த ஆட்சி உள்ளது என்றால் அது தமிழ்நாடு முதல்வரின் தலைமையிலான இந்த ஆட்சி தான்.

அதேபோல் இதுவரை 2008 பேர் கட்டணம் இன்றி அறுபடை வீடுகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டும் சுமார் 1000 முதியவர்களை கட்டணம் இன்றி அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல உள்ளோம்.

கடந்த மே 16 ஆம் தேதி சென்னையில் கூடிய உயர்மட்ட குழுவில் தமிழகத்தில் உள்ள 10 கோயில்களுக்கு அறங்காவலர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கும் விரைவில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!