கோயம்புத்தூர்: கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் சூழ்ந்த மழை நீர்!
கோயம்புத்தூர் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கொட்டித் தீர்க்க கனமழையால் முக்கிய சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது, லங்கா கார்னர் சுரங்கப் பாதையில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பெட்ரோல் நிலையத்தில் நீர் புகுந்ததால் பெட்ரோல் விநியோகம் நிறுத்தம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் காந்திபுரம், ரயில் நிலையம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகர் மற்றும் தொண்டாமுத்தூர், நரசிபுரம், ஆலாந்துறை, மருதமலை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் விமான நிலையம், அவினாசி சாலை, திருச்சி சாலை, ரயில் நிலையம் அருகே மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அவினாசி சாலையில் மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்தது.
அப்போது அங்குச் சென்ற ஒயர்களும் துண்டித்து சாலையில் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் சென்றது. மேலும் முன்னெச்சரிக்கையாகச் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.
அதே போல ஒரு நேரம் பெய்த கனமழையால் லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நிலையில் ஊர்ந்தவாறு வாகனங்கள் சென்றது.
மேலும் கோயம்புத்தூர் நீதிமன்றம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்திற்குத் தண்ணீர் புகுந்ததால் பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.