10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் – கோயம்புத்தூர் மாவட்டத்தில் 96.47% தேர்ச்சி
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. அதன் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. இதில் கோயம்புத்தூர் மாவட்டம் 96.47% தேர்ச்சி விகிதத்தைப் பெற்று, மாநில அளவில் 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 18,963 மாணவர்கள், 19,638 மாணவிகள் என மொத்தம் 38,601 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 17,999 மாணவர்கள், 19,238 மாணவிகள் என மொத்தம் 37,237 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.92% ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.96% ஆகவும் உள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கணிசமாக உயர்ந்து உள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.01% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.46% ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.50% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.