24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு, மத்தியம் மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் 24 மணிநேர குடிநீர் (சூயஸ்) திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், இன்று (16.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் படி. மேற்கு மண்டலம், தொண்டாமுத்தூர் சாலை, சுண்டப்பாளையம், கிருஷ்ணம்பதிகுளம் அருகில், பிரதான குழாய் அமைக்கும் பணிகளையும், வார்டு எண்.79க்குட்பட்ட ஏ.கே.எஸ் நகர் பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் குளோரின் கட்டிடங்களை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, மத்திய மண்டலம், வார்டு எண்.69க்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, வடகோவை பாலம் அருகில், காந்திபுரம், செம்மொழிப்பூங்கா அருகில், லங்கா கார்னர் பகுதி மற்றும் கிழக்கு மண்டலம், திருச்சி சாலை, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில், சிங்காநல்லூர், வசந்தாமில் சாலை அருகில் மற்றும் காமராஜர் சாலை, வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் (சூயஸ்) திட்டத்தின் கீழ் பிரதான குழாய் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் மற்றும் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலையினை சீரமைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.