பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இது குறித்து முதல்வர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த மிகக்கொடுமையான குற்றச் சம்பவமாகக் கருதப்படும் இந்த வழக்கை விசாரித்த கோயம்புத்தூர்மகளிர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான தண்டனை குற்றச் செயலில் ஈடுபட முயல்வோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும். சட்டத் திருத்தம்: பெண்களின் பாதுகாப்புக்கு அரணாகத் திகழக்கூடிய திராவிட மாடல் அரசு, பெண்களுக்கு எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு அஞ்சிடும் வகையில் பெண்களுக்குத் துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற சட்டத்தை அண்மையில் திருத்தம் செய்தது.
இந்தியத் தண்டனைச் சட்டத்திலும் பெண்களுக்கு எதிரான தண்டனையைக் கடுமையாக்கும் விதமாக உரியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ளது. இதனால், குற்றவாளிகள் தங்கள் குற்றங்களுக்குக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
நிவாரண நிதி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோயம்புத்தூர்மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்ற விசாரணைக் குழு ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.
அத்தகைய நியாயத்துக்காகத் துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. அந்த வகையில், நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையான ரூ.85 லட்சத்துக்கும் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
.