வைதேகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் யானை தாக்கி ஒருவர் பலி!
கோயம்புத்தூர் வைதேகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில், காட்டு யானை தாக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழந்தார்.
கோயம்புத்தூர் பூலுவப்பட்டி சின்னதம்பி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் அபிமன்யு (33), திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளை மனைவியின் தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த சுரேஷ் அபிமன்யு நரசீபுரத்தை சேர்ந்த நண்பரான சரவணன் (28) என்பவருடன் நேற்று இரவு 11.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வைதேகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலையில் சென்றுள்ளார்.
அப்போது அருகே விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டி வந்துள்ளனர். அந்த யானை வைதேகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலையில் வந்த போது அதனைக் கண்ட சுரேஷ் அபிமன்யு மற்றும் சரவணன் இருசக்கர வாகனத்தைப் போட்டுவிட்டு அங்கிருந்து ஓட முயன்றனர்.
அப்போது காட்டு யானை தாக்கியதில் சுரேஷ் அபிமன்யு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரவணன் காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து யானையை வனத்துறையினர் விரட்டினர்.
தகவல் அறிந்து வந்த ஆலாந்துறை காவல்துறை சுரேஷ் அபிமன்யு உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமாக வைதேகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலையில் மாலை நேரங்களிலிருந்தே காட்டு யானைகள் உலா வரும் பகுதி என்பதால் அங்குப் பொதுமக்கள் விவசாயிகள் யாரும் தேவையின்றி செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.