பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோயம்புத்தூர் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கோயம்புத்தூர் மகளிா் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளார்.
இன்று மதியம் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கானது அரிதான வழக்கு, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருப்பதால் குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டிருப்பதாக சிபிஐ தரப்பு வழக்குரைஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டனை பாடமாக இருக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதம் முன் வைத்திருப்பதோடு, கூட்டு வன்கொடுமையும், ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிகபட்சமாக சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும். குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டுகால சிறைத் தண்டனையாக இருக்கும் என்று கூறினார்.
தண்டனை விவரங்கள் பகல் 12 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர்கள், குற்றவாளிகள் அனைவரும் இளம் வயதினர், திருமணமாகாதவர்கள், வயதான பெற்றோர் இருக்கிறார்கள் என்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆனால், இதுபோன்ற மிக மோசமான குற்ற வழக்குகளில், இந்தப் பின்னணிகளைப் பார்க்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.