கோவில்பாளையம் பகுதியில் சுமார் 1.4 டன் புகையிலை பொருட்களைப் பறிமுதல்!
கோயம்புத்தூர் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருவதாகக் காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறையினர் காளப்பட்டி நால்வரோடு ரவுண்டானா அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தைச் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
பின்னர் விசாரணையில் தென்காசி சுரண்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (45), சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த சிலுவை அந்தோணி ரத்தினராஜ் மகன் அந்தோணி ஞானப்பிரதீஷ் (25) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1.4 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1, ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.