தவெக-வில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதால் கட்சியிருந்து விலகல் – வைஷ்ணவி
தமிழக வெற்றிக் கழகத்தில் இளம் பெண்கள் ஓரம் கட்டப்படுவதாகக் குற்றம் சாட்டி, கட்சியிலிருந்து விலகுவதாகக் கோயம்புத்தூரைச் சேர்ந்த தவெக பெண் பிரமுகர் தெரிவித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. பட்டதாரியான இளம் பெண்ணான இவர் இன்ஸ்டா, எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்த போது, விஜய் ரசிகையான தன்னையும் தவெக வில் இணைத்துக் கொண்டார். தொடர்ந்து கட்சி மற்றும் அரசியல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுதி வரும் வைஷ்ணவியை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தவெக வில் இளம் பெண்கள் ஓரம்கட்டப்படுவதாகவும், பெண்களே அரசியலுக்கு வரக்கூடாது என்பது போல மாவட்ட நிர்வாகிகள் நடந்து கொள்வதாகக் கூறி, தவெக-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய வைஷ்ணவி கூறும் போது : கடந்த மூன்று மாத காலமாக என்னைக் கடுமையாக டாமினேஷன் செய்தனர். ஆரம்பத்தில் மாவட்ட நிர்வாகிகள் முழுமையான ஆதரவளித்தனர். ஆனால் எப்போது சமூக வலைத்தளங்களில் தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கத் துவங்கியதோ, அப்போது முதல் கட்சியிலிருந்து ஓரம் கட்டுவது, பெரிய அழுத்தம் கொடுப்பது போல நடந்து கொண்டனர்.
மாவட்ட சார்ந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க மாட்டார்கள், அப்படியே அழைத்தாலும் ஓரம் கட்டி விடுவார்கள்.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சிக்குப் பொதுச்செயலாளர் வந்தபோது, அவரை சந்தித்து புத்தகம் கொடுக்க முயன்றேன். ஆனால் என்னை நான்கு பேர் சூழ்ந்து கொண்டு மேடைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.
இது குறித்துக் கேட்ட போதும் மிக மோசமான பதிலையே அளித்தனர். அண்மையில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்திற்கு கூட வருகிறேன் எனக் கேட்டபோது, கமிட்டியில் இல்லாததால் வர வேண்டாம் என நிராகரித்தனர். ஆனால் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு 18 வயதிற்குள் இருக்கும் நிர்வாகிகளின் குழந்தைகள் கூட அழைத்துச் சென்றார்கள். குழந்தைகளை உள்ளே அனுமதித்தது சரியான நடவடிக்கை அல்ல என இது குறித்துக் கேட்டபோது அப்படித்தான் செய்வோம்.
நீங்கள் அரசியலுக்குப் புதிது எனப் பேசினார்கள். மேலும் அரசியலுக்கு நீங்கள் எதற்கு வருகிறீர்கள், பெண்களுக்கு அரசியல் தேவையா? படித்துள்ளீர்கள், வீட்டிலேயே இருந்து வேலை செய்யுங்கள். என்னைப் பார்த்து அதிக இளம் பெண்கள் இக்கட்சியில் சேர்ந்தார்கள். அவர்களும் எனக்கு அழைத்து பெண்களுக்கான டாமினேஷன் அதிகமாக உள்ளது.
எனவே தவெக வில் பயணிக்க நாங்கள் விருப்பப்படவில்லை தெரிவித்தனர். தலைவரையும், கொள்கையையும் பிடித்து வந்தோம். பெண்கள் தவெக வில் நிராகரிக்கப்படுகிறார்கள்..
கட்சித் தொண்டராக இல்லாவிட்டாலும், விஜயின் ரசிகராக நான் இருப்பேன். நான் எப்போதும் தளபதி ரசிகையாய் இருப்பேன். மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல் தவெக வளரும் இளம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் கட்சியாக இருக்கும் எனக்குக் கருதினேன். மற்ற கட்சிகள் எப்படிச் செயல்படுகிறதோ அதேபோலத்தான் தவெக செயல்படுகிறது.
கட்சியிலிருந்து விலகுவது குறித்து பொதுச் செயலாளரை அழைத்துச் சொல்ல முயன்றேன். போன் எடுக்கவில்லை குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன். பொதுக்குழுக் கூட்டத்திற்குக் கலந்து கொள்ளச் சென்ற போது மாவட்ட பிரச்சினைகள் குறித்து மாவட்டச் செயலாளருக்குத் தொகுத்துக் கொடுத்தேன். அப்போதும் அங்கு நான் புறக்கணிக்கப்பட்டேன்.
பல்வேறு மாவட்டங்களில் இதே போல் இளம் பெண்கள் அரசியலுக்கு வருவது தடுக்கப்படுகிறது. ஒரு வேளை தலைவர் அழைத்தால் அவரிடம் இது பற்றிக் கூறுவேன் எனத் தெரிவித்தார்.