ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது – ரூ.1.03 லட்சம் பறிமுதல்
கோயம்புத்தூர் குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சொகுசு கார், ஒரு லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோயம்புத்தூர் மாநகரில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்தி சூதாட்டம் நடப்பதாக மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அவ்வப்போது முக்கிய இடங்களில் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கோவைப்புதூர் பகுதியில் ஐ.பி.எல் சூதாட்டம் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் அழகுமாரி செல்வம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக காரில் காத்திருந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் கோவை காளம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராம்பிரகாஷ் (43) என்பதும், இவர் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் செல்போன் மூலம் ஐ.பி.எல் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராம் பிரகாஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து சொகுசு கார், 4 செல்போன்கள், ரூ.1.03 லட்சம் ரொக்கம், 14 ஏடிஎம் கார்டுகள், 5 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 7 காசோலை புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ராம்பிரகாசை கோவை ஏழாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோயம்புத்தூர் மத்தியச் சிறையில் அடைத்தனர