காட்டு யானையை விரட்ட வந்த நரசிம்மன்..!
கோயம்புத்தூர் வெள்ளிங்கிரி மலை ஆண்டவர் கோயிலில் உலா வரும் ஒற்றைக்காட்டு யானையைக் கட்டுப்படுத்த கும்கி யானை வரவழைக்கப்பட்டது, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்குக் கடந்த பிப்.1 தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் மலை ஏற்றத்திற்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உணவு தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறும் ஒற்றைக்காட்டு யானை அங்குள்ள கடைகளைச் சூறையாடிச் சேதப்படுத்துகிறது.
காட்டு யானை கோயிலுக்குள் வராமல் தடுக்கும் வகையில் டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து நரசிம்மன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது.
இதன் மூலம் வனப்பகுதியிலிருந்து வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்குக் காட்டு யானை வர முயன்றால் அதனைத் தடுக்கவும், விரட்டியடிக்கவும் கும்கி யானை பயன்படுத்த உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போலப் பல முறை காட்டு யானை வந்தாலும் மக்களைத் தாக்குவதில்லை, உணவுப் பொருட்கள், கடைகளை மட்டுமே சேதப்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் யானையைத் தடுக்க கும்கி வந்துள்ளதாகத் தெரிவித்தனர்