இந்தியா

விடிய விடிய பெய்த கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் தலைநகர்

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) விடிய விடியக் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது.

குறிப்பாக லாஜ்பத் நகர், ஆர்கே புரம், துவாராகா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் முக்கிய சாலையிலிருந்த மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது.

மேலும் மோசமான வானிலை காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

டெல்லியில் சனிக்கிழமை வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

மேலும், உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த சில மணி நேரங்களுக்குக் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக டெல்லியின் ஜாபர்பூர் காலா பகுதியில் உள்ள வீட்டின் மீது மரம் விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

அதே போல, டெல்லி சாவாலாவில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் நான்கு பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!