மழை வேண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் விவசாயிகள் 1008 தீர்த்த குடம் எடுத்து சிறப்பு யாகம்..!
மழை வேண்டி, கோயம்புத்தூர் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் தொண்டாமுத்தூர் வட்ட விவசாயிகள் 1008 தீர்த்த குடம் எடுத்தும், சிறப்பு யாகம் செய்து வழிபட்டனர்.
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி வட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இந்நிலையில் கோடைக் காலத்தில் மழை பொழிவு பெறாததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், அதனால் கோடைக் காலத்திலும் விவசாயிகள் பாதிக்காத வண்ணம் கோடை மழை பெய்ய வேண்டி தொண்டாமுத்தூர் வட்ட விவசாயிகள் கடந்த 35 ஆண்டுகளாக சித்திரை மாதத்தில் 1008 தீர்த்த குடம் எடுத்தும், சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ஏராளமான பெண் விவசாயிகள் இணைந்து தொண்டாமுத்தூர் கோயில்களிலிருந்து எடுத்து வந்த தீர்த்த குடங்கள் என மொத்தம் 1008 தீர்த்த குடங்களில் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு யாகமும் நடைபெற்றது. இதில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் பங்கேற்றார்.
ஒவ்வொரு ஆண்டும் வேண்டுதலுக்கு ஏற்ப மழை பொழிவு இருப்பதாகவும், இந்த ஆண்டும் மழை பெய்ய வேண்டித் தீர்த்த குடம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்