சட்ட விரோதமாகச் செம்மண் வெட்டிய 4 பேர் கைது!
கோயம்புத்தூர் எட்டிமடை அருகே அனுமதியின்றி, சட்ட விரோதமாகச் செம்மண் வெட்டி எடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செம்மண் எடுக்கவும், செங்கல் சூளைகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயம்புத்தூர் எட்டிமடையைச் சேர்ந்த கணேசன் என்பவரது தோட்டத்தில் சட்ட விரோதமாக சுமார் 10 அடிக்கு மேல் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாக எட்டுமடை கிராம நிர்வாக அலுவலர் பிரதாப்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் நேரில் சென்று ஆய்வு செய்த போது, சட்ட விரோதமாகச் செம்மண் வெட்டி எடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரதாப்குமார் கோவை கே.ஜி.சாவடி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கணேசன் மகன் திருநாவுக்கரசு (45) என்பவர் சட்ட விரோதமாகச் செம்மண்ணை வெட்டி மதுக்கரையை சேர்ந்த ஓட்டுநர்களான கார்த்திகேயன் (33), ரஞ்சித்குமார் (27), சூலூரை சேர்ந்த ஞானபிரகாஷ் (29) ஆகியோர் மூலம் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் 2 டிப்பர் லாரிகள், ஒரு டிராக்டர், ஒரு ஜே.சி.பி வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் மூவரையும் மதுக்கரை தாலுக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்