கோயம்புத்தூர்தமிழ்நாடு

பாரதியார் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர் மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் ஓட்டுநர்கள், உதவியாளர்கள், மின் துறை ஊழியர்கள் என சுமார் 250 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஊழியர்களுக்குக் கடந்த நான்கு மாதமாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. அதேபோல் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் பணி நியமன ஆணையும் வழங்காததால் இப்பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வழங்கி வந்தனர்.

இருப்பினும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மே 1 , தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் பாரதியார் பல்கலைக்கழக பணியாளர்கள் நலச் சங்கத்தினர், சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்து கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நான்கு மாத ஊதியங்கள் ஊதியத்தை வழங்க வேண்டும், பணி நியமன ஆணை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் அதே போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கிய ஆயிரம் போனஸ் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!