மயோனைஸ் விற்றால் கடும் நடவடிக்கை – மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!
கோயம்புத்தூரில் சமைக்கப்படாத முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸ் தயாரிப்பவா்கள், விற்பனையாளர்கள் மீது உணவுப் பாதுகாப்பு தர நிா்ணய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா்.
சமைக்கப்படாத முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை அடுத்து அதன் தயாரிப்பு, விற்பனையை தமிழக அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு மாநிலம் முழுவதும் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு அமலாகும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அனைத்து உணவகங்கள், உணவுத் தொழில் நிறுவனங்களில் சமைக்கப்படாத முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸ் தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல், பரிமாறுதலுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே விதிமுறைகளை மீறும் உணவு நிறுவனங்களை கள ஆய்வு மேற்கொண்டு உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டத்தின்படி உரிய, துறை சாா்ந்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஷவா்மா, கிரில், தந்தூரி விற்பனையாளா்கள், அனைத்து ஹோட்டல் உரிமையாளா்கள், ரெஸ்டாரன்ட் உரிமையாளா்கள், பேக்கரி உரிமையாளா்கள், சமைக்கப்படாத முட்டையைப் பயன்படுத்தி மயோனைஸ் தயாரிக்கும் முறையை மேற்கொள்ளக் கூடாது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.