“காலனி” என்ற சொல் நீக்கம்: தந்தை பெரியார் திராவிடர் கழக வரவேற்பு
தமிழகத்தில் காலனி என்ற சொல் நீக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு, ” பெரியாரும் அம்பேத்கரும் விரும்பிய சாதியற்ற சமூகத்தை அமைப்பதற்கு ஒரு மைல் கல்லாக அமையும் ” எனத் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான மானியக்கோரிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் பொது புழக்கத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகம் வரவேற்பு மற்றும் நன்றியைத் தெரிவித்துள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று சிறப்பு வாய்ந்த ஓர் அறிவிப்பைச் செய்திருக்கிறார் காலம் காலமாகச் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்களை வைத்து சமூகத்தில் அவர்களை இழிவாக நடத்துகிற தன்மையை ஒழிக்கின்ற வகையில் இனிமேல் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழுகின்ற குடியிருப்பு பகுதிகளை காலனி என்று அழைக்கக்கூடாது அரசு ஆவணங்களிலும் இனிமேல் காலனி என்ற வார்த்தை இடம்பெறாது என்று அறிவித்திருக்கிறார்.
பெரியாரும் அம்பேத்கரும் விரும்பிய சாதியற்ற சமூகத்தை அமைப்பதற்கு இந்த அறிவிப்பு ஒரு மைல் கல்லாக அமையும். தீண்டாமை ஒழிப்பில் திராவிடமாடல் அரசு ஆளுகின்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்குத் தந்தை பெரியார் திராவிட கழகம் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.