சூலூர் செஞ்சேரிமலையில் கார் கவிழ்ந்து விபத்து – தாய், மகள் படுகாயம்..!
கோயம்புத்தூர் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலையில் கட்டுப்பாட்டை இழந்தக் கார் மலையிலிருந்து விழுந்த விபத்தில் தாய் மகள் செவ்வாய்க்கிழமை படுகாயமடைந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வாணி (48), மகள் ஸ்ரீநிவேதா (25). இந்நிலையில் வாணி மற்றும் மகள் ஸ்ரீ நிவேதா இருவரும் அவர்களது டாடா டியோகா காரில் சூலூர் அடுத்த செஞ்சேரிமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்குச் சென்றனர்.
காரை மகள் ஸ்ரீ நிவேதா ஓட்டியதாகத் தெரிகிறது. கார் மலை உச்சியை அடைந்தவுடன், காரை அங்கிருந்த வாகனம் நிறுத்துமிடத்தில் ஸ்ரீ நிவேதா நிறுத்த முயன்றார்.
அப்போது பிரேக் அழுத்தி வாகனத்தை நிறுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக ஆக்ஸ்லேட்டரை ஸ்ரீ நிவேதி மிதித்துள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், மலையிலிருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரை ஓட்டிய ஸ்ரீ நிவேதா தலை மற்றும் கைகளில் படுகாயமடைந்தார். மேலும் அருகே அமர்ந்திருந்த தாய் வாணிக்கும் படுகாயம் ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரையும் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.