பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது – கனிமொழி
பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது என தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவாஸ்கனி, ஈஸ்வரசாமி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, திமுக மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
.
அப்போது பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி,
“பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்குபவர்தான் சுயமரியாதைக்காரர்.
ஆண், பெண், நிறம், பொருளாதாரம் என பல்வேறு வகைகளில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. மதவாதிகள் சிலர், தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உடைக்கக் கூடாது என நினைக்கின்றனர். தவறான அரசியல் மூலம் தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது, அதைத் தவிர்க்க வேண்டும்.
தேர்தல் வெற்றி, கட்சிப் பொறுப்பு என எத்தனையோ பொறுப்புகள் எனக்கு கிடைத்தாலும், ‘என் வீட்டில் அனைவரும் திமுக. என் மகள் மட்டும் திக’ என என் அப்பா கருணாநிதி கூறியதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்” என்று பேசியுள்ளார்.