ஓட்டு எப்படிப் பெறப் போகிறோம் என்பதற்கான கூட்டம் அல்ல – தவெக விஜய்
கோவையில் நடக்கும் வாக்கு முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஓட்டு எப்படிப் பெறப் போகிறோம் என்பதற்கான கூட்டம் அல்ல, ஆட்சிக்கு வந்த என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பேசக்கூடிய கூட்டம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வாக்குச் சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தவெக வாக்குச் சாவடி முகவர்கள் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வாக்குச் சாவடி முகவர்களுக்கான களப்பணிகள் குறித்துப் பேசப்பட்டது. முன்னதாக பயிற்சி கருத்தரங்கிற்கு வந்த வாக்குச் சாவடி முகவர்களின் செல்போன்கள் வாங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அடையாள அட்டையைக் காண்பித்த பின்னர் வாக்குச் சாவடி முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூணா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கில் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டச் செயலாளர்களுக்கு வாக்குச் சாவடி குறித்தான விபரங்கள் அடங்கிய தொகுப்பு, பென் டிரைவ் வழங்கப்பட்டது.
இந்த வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கில் பேசிய தவெக தலைவர் விஜய் பேசும் போது:
கோவை என்றாலும், கொங்குப் பகுதி என்றாலும் இந்த மண் மற்றும் மக்களின் மரியாதை தான் ஞாபகத்திற்கு வரும், இன்று நடப்பது பேரு தான் பயிற்சிப் பட்டறை. ஆனால் இங்குக் கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் வேறு ஏதோ விழா நடப்பது போன்று இருக்கிறது. பூத் கமிட்டி கூட்டம் என்றால் அது ஓட்டுக்காக நடக்கக்கூடிய ஒரு விஷயம்.
ஆனால் இது ஓட்டுக்காக நடக்கக்கூடிய விஷயம் மட்டுமல்ல, ஆட்சி அதிகாரம் என்றாலே அது ஓட்டு சம்பந்தப்பட்டது தான், ஆனால் நாம் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பேசக்கூடிய கூட்டம் தான் இது. இதுவரை இருந்தவர் செய்ததை, நாம் செய்யப் போவது கிடையாது.
நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்களின் நலனுக்காக மட்டும்தான். இந்த பூத் லெவல் ஏஜென்ட் கூட்டத்தில் மக்களிடமிருந்து நாம் எப்படி ஓட்டுக்களை வாங்கப் போகிறோம் என்பதைப் பற்றி மட்டுமே பேசப் போகும் கூட்டம் கிடையாது.
அதையும் தாண்டி மக்களுடன் நாம் எப்படி ஒன்றிணைந்து இருக்கப் போகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம், அதைப்பற்றிப் பேசுவதற்காக மட்டுமே இந்த பயிற்சி பட்டறை. இதற்கு முன்னர் நிறையப் பேர் வந்திருக்கலாம், சென்றிருக்கலாம் நிறையப் பொய்களைக் கூறி இருக்கலாம், மக்களை ஏமாற்றி இருக்கலாம்.
இதெல்லாம் செய்து ஆட்சியைப் பிடித்திருக்கலாம், இதெல்லாம் பழைய கதை.. அதையெல்லாம் செய்வதற்கு நான் இங்கு வரவில்லை இனி ஒருபோதும் அவையெல்லாம் நடக்காது நடக்கவும் விடமாட்டேன். நம்முடைய கட்சியின் மேல் மக்களுக்கு நம்பிக்கையைக் கொண்டு வரப் போவதே, பூத் லெவல் ஏஜெண்டுகள் தான்.
இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு போர் வீரனுக்குச் சமம். நாம் ஏன் வந்திருக்கிறோம் எதற்கு வந்திருக்கிறோம் எப்படிப்பட்ட ஆட்சியைத் தரப்போகிறோம், என்பதை எடுத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் நம்மிடம் மனதில் நேர்மை இருக்கிறது, கறை படியாத நேர்மை உண்மை இருக்கிறது.
அர்ப்பணிப்பு செயல்படும் திறன் உள்ளிட்டதையும் இருக்கிறது. களமும் இங்கு தயாராக இருக்கிறது எனப் பேசினார்.