விஜய் வருகையால் கோயம்புத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்…!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜய், கோயம்புத்தூரில் நடைபெறும் கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தடைந்தார்.
இவரது வருகையால் அவினாசி சாலையில் காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.கோயம்புத்தூர் விமான நிலையத்தில் விஜய்க்குக் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அவர் அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் தங்குவதற்காக கார் மூலம் புறப்பட்டார். இதனால், அவினாசி சாலை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், வழக்கத்தைவிட அதிக அளவில் பொதுமக்கள் பயணித்ததும் போக்குவரத்து நெரிசலை மேலும் தீவிரமாக்கியது.
விஜய்யின் வருகையைக் காண ஏராளமான ரசிகர்கள் அவினாசி சாலையில் கூடியதால், போக்குவரத்து மேலும் முடங்கியது. ஒரு சில ரசிகர்கள் விஜயின் வாகனத்தில் ஏற முயன்றதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நெரிசல் காரணமாக, வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
விஜய்யின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அவினாசி சாலையில் இன்று முழுவதும் போக்குவரத்து நெரிசல் தொடர வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது