கோவையில் தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு – விஜய்-யிடம் கடிதம் கொடுத்த தொண்டர்கள்
கோவையில் நடைபெறும் தவெக பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அக்கட்சித் தலைவர் விஜய்க்குக் கோவை விமான நிலையத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் விஜயை வரவேற்க அக்கட்சி தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விஜய் விமான நிலையத்திலிருந்து தனது வாகனத்தின் ஏறி தொண்டர்களைப் பார்த்து கையை அசைத்தவாறு சென்றார்.
அப்போது விமான நிலையத்திலிருந்து அவினாசி சாலை வரை வழிநெடுக காத்திருந்த தொண்டர்கள் விஜயை மேளதாளங்களுடன் வரவேற்றனர்.
முன்னதாக விமான நிலையம் அருகே விஜய் கையசைத்தவரே வந்த வாகனத்தின் மீது இரண்டு தொண்டர்கள் ஏறி கடிதம் ஒன்றை வழங்கினர். அவர்களுக்கு விஜய் தனது கட்சி துண்டை அணிவித்து உற்சாகப்படுத்தினார். பின்னர் அந்த இருவரும் கீழே இறக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் ஓய்வெடுக்கச் சென்றார். இதையடுத்து மாலையில் சரவணம்பட்டி பகுதியில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் விஜய் கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
அப்போது பூத் கமிட்டி நிர்வாகிகளுக்குத் தேர்தல் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் எனப் பயிற்சி வழங்கப்பட உள்ளது