குட்கா விற்ற இருவர் கைது – வாசிங் மெசினில் இருந்த ரூ.10 லட்சம் பறிமுதல்
கோயம்புத்தூர் குனியமுத்தூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளர் மற்றும் அதனைத் தீயிட்டு எரித்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் குனியமுத்தூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் தனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்குச் சென்ற போது, ஏற்கனவே புகையிலை விற்பனை செய்ததாக அவருக்கு அபராதம் விதித்ததாகவும் அதனால் இப்போது விற்பனை செய்யவில்லை எனக் கூறினார்.
சந்தேகமடைந்த போலீசார் வீட்டிற்குச் சோதனைக்குச் சென்ற போது, அவரது மகன் பார்த்திபன் வீட்டிலிருந்த குட்கா புகையிலை பொருட்களை வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில் எரித்துக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட போலீசார் அதனைத் தடுத்து நிறுத்தி, தீயை அணைத்தனர். இதையடுத்து வீட்டில் சோதனையிட்ட போது உள்ளே இருந்த வாசிங் மெசினில் பழைய துணிகளுடன் ரூ.10 லட்சம் பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரசால் தடை விதிக்கப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கண்ணன் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.