கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை!
கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்த டெல்லி – திருவனந்தபுரம் விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனையிட்டனர்.
அண்மையில் காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் உடைமைகள் முழுமையான சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியிலிருந்து கோயம்புத்தூர் வழியாகத் திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் மதியம் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்த போது, ரயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் ரயில் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்தனர்.
ரயில் நிலையம் நுழைவாயிலிலிருந்த பயணிகளின் உடைமைகள் மற்றும் அனைத்து நடைமேடைகள் என முழுமையாகச் சோதனை மேற்கொண்டனர். மேலும் ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட தபாலில் வந்த பொருட்களும் சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகிறது