குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு வரும் தொழிலாளர்களை உரிய முறையில் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் வருங்கால வைத்து நிதி தொடர்பாகக் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பி.எப் அலுவலகத்திற்கு வரும் தொழிலாளர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, எச்.எம்.எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர், கோயம்புத்தூர் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒன்றிய அரசைக் கண்டித்து கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கை மனுக்களை பி.எப் அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து எச்.அம்.எஸ் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் ராஜாமணி கூறும் போது : தினமும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்திற்கு வரும் அப்பாவி தொழிலாளிகளைச் சரியாக நடத்தாமலும், முறையாக வழிகாட்டாமலும், சாதாரண தவறு இருந்தாலும், அவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இந்த மோசமான போக்கை பி.எப் நிர்வாகம் கைவிட வேண்டும்., தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு உரியத் தீர்வு காண வேண்டும் என ஆணையரை வலியுறுத்துகிறோம். மேலும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஏற்கனவே கமிசன் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதுவரை அமல்படுத்தாமலும், வாய் திறக்காமலும் உள்ளனர்.
அதனனி உடனடியாக அமல்படுத்த வேண்டும். ரூ.9 ஆயிரம் கேட்கும் நிலையில் வெறும் ஆயிரம், 900 வழங்குகின்றனர். தொழிலாளர்களின் ஊதியத்தில் 8.33 பிடித்தம் செய்யப்படும் நிலையில் தொகையில், குறைந்தபட்சம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அப்போது தான் மருந்து மாத்திரைகள் கூட வாங்கி சாப்பிட முடியும், எனவே உடனடியாக ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய பஞ்சாலை ஊழியர்கள் 42 பேருக்குச் சிறிது காலம் பென்சன் வழங்கி விட்டு நிறுத்தி விட்டார்கள் அதனை மீண்டும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.