கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி அனைத்து விவசாயிகள் சங்கங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்!
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழுவினர் கோயம்புத்தூர் டாடாபாத் பகுதியில் “கள் பானைகளுடன்” அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலைப் பயன்படுத்தி தமிழகத்தில் பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும், கள்ளச்சாராய விற்பனை செய்யும் சமூக விரோதிகளுடன், கள் உற்பத்தியில் செய்யும் விவசாயிகளை இணைத்து அவமானப்படுத்தக் கூடாது. தேங்காய்க்குக் குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கோயம்புத்தூர் டாடாபாத் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கள் பானைகள், கள் இறக்கப் பயன்படுத்தும் பொருட்களுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர். நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பி.ஆர்.பாண்டியன், நல்லுசாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்துப் பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:
தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும், கள் உணவுப் பொருட்கள் அதனை இறக்க அனுமதி வழங்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதனைத் தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. தற்போதைய அரசு மது விற்பனையை அதிகப்படுத்துவதற்காகத் திட்டமிட்டுச் செயல்படுகிறது. கொங்கு மண்டலத்தில் கள்ளை இறக்கி விற்பனை செய்யும் பெண் விவசாயிகள் அதிகம் உள்ளனர்.
அவர்கள் மீது கள்ளச் சாராய வழக்கு, விஷச் சாராய வழக்குப் போட்டு அவமதித்து வருகின்றனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் மக்கள் குறைகளை யாரும் கேட்கவில்லை. கொங்கு மண்டலத்தில் தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. பிற மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஏன் அனுமதியில்லை.
உடனடியாக தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும், உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும், தேங்காய்க்குக் குறைந்த பட்ச ஆதார விலை வழங்க வேண்டும், தேங்காய் எண்ணெய்யை பொது விநியோக கடைகளில் விற்பனை செய்ய வேண்டும், பாமாயில் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.