பங்கு வர்த்தக முதலீட்டில் அதிக லாபம் வரும் எனக் கூறி ரூ.50 லட்சம் மோசடி – வங்கி பெண் உதவி மேலாளர் 3 பேர் கைது
பங்கு வர்த்தக முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறிக் கூறி, கோயம்புத்தூரைச் சேர்ந்த நபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த தனியார் வங்கி பெண் உதவி மேலாளர் உட்பட மூவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் கணபதி கே.ஆர்.ஜி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஜு மேத்யூவ் (51). இவர் பங்கு வர்த்தகம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது செல்போன் எண்ணை “No.999-PIN-Wealth Think Tank” என்ற வாட்ஸ் குழுவில் ஒருவர் இணைத்துள்ளார். மேலும் இக்குழுவில் இணைத்தவர் தன்னை பிரபல தொழில் நிறுவனத்தின் முன்னால் ஊழியர் எனக்கூறி அறிமுகமாகி உள்ளார்.
மேலும் இக்குழுவிலிருந்த தனியார் வங்கி உதவி மேலாளர் நித்தியா (32), மற்றும் சிவக்குமார், குமரேசன் ஆகியோர். “PIN FUND” என்ற நிறுவனத்தில் ஜோஜூ மேத்யூவை முதலீடு செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிறுவனம் தொடர்பாகப் போலியான ஆவணங்களைக் காட்டி அதிக லாபம் வரும் நிறுவனம் எனக்கூறி வந்த நிலையில், இதனை உண்மை என நம்பி ஜோஜு மேத்யூவ் பல தவணைகளில் ரூ.50 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
ஆனால் அவர்கள் கூறியது போல எந்த லாபமும் வராததால் சந்தேகமடைந்த அவர் முதலீடு செய்த பணத்தைத் திருப்பி கேட்ட போது, கூடுதல் பணம் செலுத்தினால் மட்டுமே, முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஜோஜு மேத்யூவ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து அவர் கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு நிறுவனத்தின் பெயரில் போலியான ஆவணங்களை உருவாக்கி அதன் மூலம் பலரை மோசடியாக ஏமாற்றி வந்த கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சிவக்குமார், ஓசூரைச் சேர்ந்த குமரேசன் (29), தனியார் வங்கி உதவி மேலாளர் நித்தியா (32) ஆகிய மூவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் தமிழகம் முழுவதும் 66 பேரிடம் இதே போல ஏமாற்றி ரூ.90 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 5 செல்போன்கள், 9 சிம் கார்டுகள், 25 ஏ.டி.எம், 23 பாஸ்புக், 62 காசோலைகள், 3 லப்பர் ஸ்டேம், யூ.ஆர். ஸ்கேனர், பில் புத்தகம் ஆகிய பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.