சசிகலா, ஓ.பி.எஸ் இல்லாமலேயே அதிமுக பலமான எதிர்க்கட்சியாக உள்ளது – விந்தியா
சசிகலா, ஓ.பி.எஸ் இல்லாமலேயே அதிமுக பலமான எதிர்க்கட்சியாக உள்ளது, கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, மே தின கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் என்பதையும் அறிவித்துள்ளோம் என அதிமுக தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யை அரசியல் தலைவராகவே பார்க்கவில்லை, களத்திற்கு வரட்டும் எனவும் விமர்சனம் கோயம்புத்தூர் செஞ்சிலுவைச் சங்கம் அருகில் தி.மு.க அரசைக் கண்டித்தும், அமைச்சர் பொன்முடியைப் பதவி விலகக் கோரியும் கோயம்புத்தூர் மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக தலைமை கழகப் பேச்சாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசைக் கண்டித்தும், அமைச்சர் பொன்முடியைப் பதவி விலகக் கோரியும் கண்டன கோசங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விந்தியா கூறியதாவது:
பெண்களைப் பற்றியும், மதங்களைப் பற்றியும் இழிவாகப் பேசிய அமைச்சருக்குக் கண்டனம் தெரிவித்து, கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. இன்றைய ஆளத் தெரியாத தி.மு.க ஆட்சிக் காலத்தில், பெண்கள் மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான எத்தனையோ குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
ஆனால் அவர்களுக்குச் சாதகமாக ஏதாவது ஒரு செய்தி கிளம்பி திசையைத் திருப்பி விடுகிறது. தி.மு.க எப்பொழுதுமே அடுத்தவர்களைக் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறது. எதிர்க் கட்சிகளை மத்திய அரசைக் குறை சொல்வதையே நோக்கமாகக் கொண்டு இருக்கிறது.
அதிமுக உட்கட்சி பூசல் குறித்த கேள்விக்கு : நாங்கள் நிச்சயம் அண்ணன், தம்பியைப் போலத் தான் ஒவ்வொருவரும் பழகிக் கொண்டு இருக்கிறோம், மே தினம் கூட்டம் கூட செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் தான் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாங்கள் எல்லோரும் நன்றாகத் தான் இருக்கிறோம். தி.மு.க வின் தப்பை மறைப்பதற்காக இதுபோன்று ஊதி பெரிதாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல நாங்கள் நிம்மதியாகச் சந்தோஷமாக இருக்கிறோம் என்றார். அதேபோல சசிகலாவும் ஓ.பி.எஸ் யும் இல்லாத பலமான எதிர்க்கட்சியாகத் தான் நாங்கள் இருக்கிறோம். இது தான் அ.தி.மு.க, இதுதான் இரட்டை இலை, இது தான் இயக்கம் என்பதை நாங்கள் அனைவருக்கும் நிரூபித்து விட்டோம். பொறுப்புக்கு வந்ததற்குப் பிறகு என்னுடைய செயல் அனைத்துமே செயலாகத் தான் இருக்கும் எப்பொழுதுமே பேச்சாக இருக்காது என்று விந்தியா கூறினார்.
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் குறித்த கேள்விக்கு :
நான் இன்னும் அவரை அரசியல் தலைவராகப் பார்க்கவில்லை. இன்னும் விஜய் எந்த அரசியலுமே செய்யவில்லை. முதலில் அவர் அரசியல் களத்திற்கு வரட்டும், பேசட்டும் அதன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்றார். விஜய் எதை வேண்டுமென்றாலும் டார்கெட் செய்யலாம் ஆனால் இது சினிமா கிடையாது.
இது அரசியல் மக்களின் களத்தில் நின்று அரசியல் செய்வது மிகவும் கடின, உண்மையாக நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மை உண்மை பொறுமை என்பது விஜய்க்கு இருக்கிறதா? என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.