கோவையில் த.வெ.க. பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் ஆய்வு!
கோவை, சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வருகிற ஏப்.26 மற்றும் ஏப்.27 -ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதற்காகக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும் கூட்ட அரங்கம் பணிகளை இன்று (புதன்கிழமை ) அதிகாலை 4 மணிக்குப் பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.இந்த நிலையில் கோவை வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ள அரங்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இந்தக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் குறித்துப் பேசிய மாவட்ட தலைவர் சம்பத் கூறியதாவது : தமிழக வெற்றி கழகத்தின் மண்டல வாரியாக நடக்கக் கூடிய, வாக்குச்சாவடி முகவர்களின், கருத்தரங்கம் வருகிற 26 மற்றும் 27 ஆம் தேதி கோவை மண்டலத்தில் நடைபெறுகிறது.
26 ஆம் தேதி ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள், 27 ஆம் தேதி கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கு உண்டான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மாலை 3 மணிக்கு ஆரம்பிக்கக் கூடிய நிகழ்ச்சி, ஏழு முப்பதுக்கு நிறைவடையும்.
ஒரு, ஒரு நாளுக்கு 8,000 வீதம் கலந்து கொள்ள உள்ளனர். கல்லூரி வளாகம் என்பதால் கருத்தரங்கிற்கான நிகழ்ச்சி மட்டுமே நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.