ஆலைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!
ஆலைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கக் கோரி, தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், ஆலை தொழிலாளர்களுக்கான வேலை இழப்பு அதிகரித்து வருகிறது. எனவே தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆலைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கக் கோரியும், மூடப்பட்ட ஆலைகளைத் திறக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்துப் பேசிய தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நாகேந்திரன் கூறும் போது: தமிழ்நாடு முழுவதும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், ஆலைத் தொழிலாளர்கள் வேலை இழப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சமூக பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாகத் தேசிய பஞ்சாலை கழகம் ஆலைகள் நாடு முழுவதும் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பொருளாதாரம் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தொழிலாளர்கள் பாதிப்பைத் தவிர்க்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக கவனம் செலுத்தி முத்தரப்பு கமிட்டி அமைத்து தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும், தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்