கோயம்புத்தூர் 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!
கோயம்புத்தூர் மயிலேறிபாளையம் தனியார் மருந்தியல் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தமிழரசன் (19)., இவர் கோவை மயிலேறிபாளையம் பகுதியில் உள்ள கற்பகம் மருந்தியல் கல்லூரியின் விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு பி.பார்ம் படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த யுகேஷ், ரகு ஆகிய இரண்டு மாணவர்களை, தமிழரசன் விடுதி காப்பாளருக்குத் தகவல் அளிக்காமல் மாணவர்களின் பெயரைப் போலியாகச் சேர்த்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் இரவு வந்த போது விடுதி காப்பாளர் கண்டுபிடித்து மாணவர்களின் அடையாள அட்டையை வாங்கி வைத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து விடுதி காப்பாளர், கல்லூரியின் பி.பார்ம் துறைத் தலைவர் கந்தசாமிக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து துறைத் தலைவர் கந்தசாமி விசாரணை மேற்கொண்டு தமிழரசனின் பெற்றோரிடம் தகவலைத் தெரிவித்துள்ளார். மேலும் செவ்வாய்க்கிழமை துறை ரீதியான விசாரணை முடித்துவிட்டு, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வகுப்பறைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க கல்லூரியின் விடுதிக்குச் சென்ற தமிழரசன் மன உளைச்சலிலிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவரது அறையிலேயே தமிழரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் தூக்கில் தொங்குவதைக் கண்ட சக மாணவர் சிலம்பரசன் என்பவர், அங்கிருந்தவர்களுக்குத் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து தமிழரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.