ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் 40 சவரன் நகை, பணம் திருட்டு!
கோயம்புத்தூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் சாலை சுண்டாப்பாளையம், எஸ்.எம்.நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (74). ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர், இவர் தனியார் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் தனது பேத்தியின் சீர் நிகழ்ச்சிக்காக உள்ளூரில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க, தனது மூத்த மகளுடன் வீட்டைப் பூட்டி விட்டுச் சென்று உள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவிலிருந்த பொருட்கள் கலைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து வடவள்ளி காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அங்குப் பதிவான தடயங்களைச் சேகரித்தனர். மேலும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் வைக்கப்பட்டது இருந்த 40 சரவன் தங்க நகைகள் ரூ.3 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.
மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, பணம், நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்