கோயம்புத்தூர்தமிழ்நாடு

பாரதியார் பல்கலைக்கழக கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் மனு!!

பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரின் மனு அளித்தனர்.

கோயம்புத்தூர் மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கான சுருக்க ஆய்வு உரை, முழு ஆய்வு அறிக்கை, மறு ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் மனு அளித்தனர். முன்னதாக ஆட்சியர் அலுவலர் வளாகம் முன்பு கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் கோசங்களை எழுப்பினர்

இது குறித்து பேசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொருளாளர் தினேஷ்ராஜா கூறும் போது: பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 4 மாவட்டங்களில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது பல்கலைக்கழகம் மோசமான நிலையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாகத் துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படவில்லை.

கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டத்தின் விளைவாகப் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளருக்கான நேர்முக தேர்வு நடைபெற்றது, ஆனால் தற்போது வரை யாரும் நியமிக்கப்படவில்லை. அதே போல ஆராய்ச்சி மாணவர்கள் படிப்பிற்கான இரசாயனம் கிடைப்பதில் பிரச்சனை உள்ளது.

2018 -ல் ஒன்றிய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ஜெம் போர்டலில் மட்டுமே இரசாயனம் வாங்க வேண்டும் என்ற சரத்தைக் கொண்டு வந்தனர், அதன் பிறகு ஆனால் அடிப்படை இரசாயனம் கூட கிடைக்கவில்லை. 12 துறை ஆராய்ச்சி மாணவர்கள் இரசாயனம் கிடைக்காததால் 2 ஆண்டுகளாக ஆராய்ச்சியை முடிக்காமல் உள்ளனர். ரூசோ நிதி மூலம் பல கோடி மதிப்பீட்டில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை.

இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், அதனை உடனடியாக திறக்க வேண்டும், மேலும் ஆங்கிலத் துறை பேராசிரியர் பத்மநாபன் என்பவர் மீது தொடர்ச்சியான புகார்கள் வருகிறது, அதனை விசாரிக்க வேண்டும். ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்விக் கட்டண அதிகளவும் உயர்ந்துள்ளது, அதனைத் திரும்பப் பெற வேண்டும்.

மேலும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும், பல்கலைக்கழகத்தில் உள்ள 400 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம், உயர் கல்வித்துறையைக் கேட்டுக்கொள்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிகளவு மாணவர்களைத் திரட்டி பாரதியார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிடுவோம் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!