கோவையில் தையல் கலைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!
கோயம்புத்தூர்: தேர்தல் வாக்குறுதியில் கூறிய ரூ.1,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் சட்டமாக்கிய அமைப்பு சாரா தொழிலாளர்களை இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தினர், மாவட்ட தலைவர் ஆர்.மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தையல் கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ஆர்.வேலுச்சாமி, சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அமைப்பு சாரா ஓய்வூதியத்தை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கக் கோரியும், இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்க வலியுறுத்தியும் கோசங்களை எழுப்பினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழ்நாடு முதல்வருக்கு மனு அளித்தனர்.
இது குறித்துப் பேசிய கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ஆர்.வேலுச்சாமி கூறியதாவது :
கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், திமுக அரசு வழங்கிய தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
4 ஆண்டுகளுக்கு முன் தேர்தல் நேரத்தில் அனைத்து அமைப்பு சாரா ஓய்வூதியர்களுக்கும் ரூ.1,500 உயர்த்தி வழங்குவோம். அனைத்து நலவாரியப் பணப்பலன்களும் உயர்த்தப்படும் எனச் சொல்லப்பட்டது. அவ்வாறு கூறப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
மாறாக ரூ.1,200 ஆகத் தான் உயர்த்தப்பட்டு தரப்படுகிறது, கூடுதல் 300 யை உயர்த்தி வழங்க வேண்டும்.
ஒன்றிய அரசு கூறியது போல அனைத்து ஓய்வூதியங்களும் ரூ.3. ஆயிரம் ஆக வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை,
ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாகத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.
அமைப்பு சாரா வாரியங்களில் கட்டுமானம், ஆட்டோ வாரியத்தில் நிதி வரவு உள்ளது. ஆனால் 16 வாரியத்தில் நிதி வரவு இல்லாததால் உதவித் தொகைகள் உயர்த்தப்படாமல் உள்ளது.
18 வாரியங்கள் ஒன்றாக இருந்த நிலையில், நிதி வரவு இல்லாத வாரியங்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தாமல் பாகுபாடு பார்த்து, பிரித்தாலும் சூழ்ச்சி நடக்கிறது. தமிழக அரசு 18 வாரிய தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான உதவி தொகையை வழங்க வேண்டும், போர்க் கால அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், கார்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கும் மோடி அரசு, இது போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அதே போல அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கூறி 2020 நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை இ.எஸ்.ஐ கார்பரேசன் கிடப்பில் போட்டுள்ளது. தமிழகத்தில் 70 லட்சம் முறை சாரா தொழிலாளர்கள், நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.
அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ளது உடனடியாக இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும். தமிழக முதல்வருக்கும், ஆட்சியர் மூலமாக முதல்வருக்கு அனுப்புகிறோம் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என தெரிவித்தார்.