வெள்ளியங்கிரி மலையேறிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு!
கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலையேறிய தொழிலாளி பாறையிலிருந்து தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் புவனேஷ் (18), கட்டிடக் கூலித் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி புவனேஷ் தனது பள்ளி நண்பர்கள் இருவருடன் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பேருந்து மூலம் கோயம்புத்தூர் வந்தார். பின்னர் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு வந்த, புவனேஷ் 18 -ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை நண்பர்களுடன் வெள்ளிங்கிரி மலை ஏறினார்.
7 -வது மலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு மீண்டும் கிளம்பியபோது மழை பெய்ததாகத் தெரிகிறது. இதில் எதிர்பாராத விதமாகப் பறையில் இருந்து புவனேஷ் கால் வழுக்கித் தவறி விழுந்தார். கீழே விழுந்ததில் புவனேஷின் தலை மற்றும் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நண்பர்கள் இணைந்து புவனேஷ் உடலைச் சனிக்கிழமை அதிகாலை வடிவத்திற்கு எடுத்து வந்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆலாந்துறை காவல்துறை புவனேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.