உலக மரபு நாள் விழிப்புணர்வு பேரணி – மரபைக் காப்போம் … பண்பாட்டைப் போற்றுவோம் … வரலாற்றை மீட்போம் … !
உலக மரபு நாள் முன்னிட்டு கோவை பந்தயச் சாலை பகுதியில், தனியார் அறக்கட்டளை சார்பாக, உலக மரபு நாள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பேரணியைத் துவக்கி வைத்தனர்.
மரபைக் காப்பது, பண்பாட்டைப் போற்றுவது, வரலாற்றை மீட்பது உள்ளிட்டவற்றின் சாரங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி 6 கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர் பேரணியாகச் சென்று மரபு சார்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
கோவை பந்தயச் சாலை முகப்பு பகுதியில் ஆரம்பித்த இந்த பேரணி, மீடியா டவர் வழியாகச் சென்று மீண்டும் அதே இடத்தில் வந்தடைந்தது.
இதுகுறித்து தனியார் அமைப்பினர் கூறும்போது : உலகில் தொன்மையாந நாகரீகம் கொண்டது தமிழ்ச் சமூகம். முன்னோர்களின் பண்டைய கால வாழ்வியல், வாழ்க்கை நெறிகள் உள்ளிட்டவை கல்வெட்டுகள் செப்பேடுகள் சிற்பங்கள் உள்ளிட்டவற்றில் இடம் பெற்று இருக்கின்றன. இதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது அவசியம்.
அதன் அடிப்படையில், பழங்கால அடையாளங்களைப் பத்திரப்படுத்திப் பாதுகாத்து, அதன் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, யாக்கை பல்வேறு களப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளப் பேரணி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டின் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள், பல கோடி ரூபாய் ஒதுக்கி மரபு சின்னங்களைப் பாதுகாக்க வழி வகை செய்கிறார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்தனர்.