கோயம்புத்தூர்தமிழ்நாடு

பூப்படைந்த மாணவியை வகுப்பறை வெளியே தேர்வு எழுத வைத்த விவகாரம் – மாணவியின் தந்தை ஆட்சியரிடம் புகார்

கோவையில் பூப்படைந்த 8 ஆம் வகுப்பு மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்துத் தேர்வு எழுத வைத்த விவகாரத்தில், வன்மை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தனியார்ப் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்யக் கோரி, மாணவியின் தந்தை கோவை ஆட்சியர் அலுவலகம், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் சுவாமி சித்பாவனந்தா தனியார்ப் பள்ளியில், 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியைப் பூப்படைந்ததால் வகுப்பறை வாசலில் அமர வைத்து பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத வைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை உத்தவிரன் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் நேரில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேலும் மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் நெகமம் காவல் நிலையத்தில் பள்ளியின் தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகிய மூன்று பேரும் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் புகார் அளித்ததால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சுரேந்திரநாத் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய மாணவியின் தந்தை கூறும் போது: இந்த விவகாரம் குறித்துக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த மூவரும் கைது செய்யப்படவில்லை. தினமும் வேலைக்குச் சென்று வரும் போது அச்சத்துடன் சென்று வருகிறோம். மேலும் நாங்கள் இருவரும் வேலைச் செல்வதால் மகளைத் தனியாக விட்டுச் செல்லவும் அச்சமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்ய வேண்டும், எங்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!